அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தேர்தல் வாக்குறுதியும் கள நிலவரமும்:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, "ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்" என்று உறுதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் தொழிலாளர்களின் போராட்டக் குரல்கள் தவெக சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதிய அரசு அமைந்து 100 நாட்களைக் கடந்த பின்னரும், ஆட்டோ தொழிலாளர்களின் மிக முக்கிய கோரிக்கையான ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகள்: இலவசப் பேருந்து திட்டத்தின் தாக்கம்: 'மகளிருக்கான வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல கிலோமீட்டர்கள் வரை பேருந்துகள் இயக்கப்படுவதால், ஆட்டோ தொழிலாளர்களின் தினசரி வருமானம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
முடிவு பெறாத பேச்சுவார்த்தைகள்:
போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் மட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்கென தனி குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், இன்றுவரை மீட்டர் கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
முறைப்படுத்தப்படாத பைக் டாக்ஸிகள்:
அரசுக்கு முறையான வரி மற்றும் அனுமதிச் சீட்டு (Permit) செலுத்தி இயங்கும் ஆட்டோக்களை ஒருபுறம் புறந்தள்ளிவிட்டு, எவ்வித ஒழுங்குமுறையும் அனுமதியும் இல்லாத பைக் டாக்ஸிகள் தடையின்றி இயங்க அனுமதிக்கப்படுவது ஆட்டோ தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் இத்தகைய போக்கால் தொழிலாளர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
தோழர் முகமது இப்ராகிம் வேதனை மரணம்:
இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்வாதார இழப்பைத் தாங்க முடியாமல், கடந்த செப்டம்பர் 27 அன்று தனது வேதனையை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு, செப்டம்பர் 28 அதிகாலையில் திரு. முகமது இப்ராகிம் என்ற ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர் சமூகத்தை பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அரசுக்கு வைக்கும் முக்கியக் கோரிக்கைகள்:
ஓட்டுநர்களின் இந்த நீண்டகால வாழ்வாதார இழப்பிற்கு கடந்த காலங்களில் ஆட்சி செய்த திமுக, அதிமுக அரசுகளின் அலட்சியப் போக்கே முழு முதற்காரணம் என்றாலும், தற்போது பொறுப்பில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாகத் தலையிட்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மறைந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது காசிம் அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி வழங்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும். உரிய விதிமுறைகளுக்கு உட்படாத பைக் டாக்ஸிகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் அல்லது சட்டபூர்வமாக முறைப்படுத்த வேண்டும். மேக்ஸி கேப்களுக்கு (Maxi Cab) உரிய சீட் பெர்மிட் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஓலா (Ola), ஊபர் (Uber), ராபிட்டோ (Rapido) உள்ளிட்ட அக்ரிகேட்டர் நிறுவனங்களை அரசின் கடுமையான வரைமுறைக்குள் கொண்டுவந்து ஓட்டுநர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
உண்ணாவிரதப் போராட்டம்:
தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை அரசு உணர்ந்து, நாளை திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்திற்கு முன்பாகவே சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் வியாழக்கிழமை திட்டமிட்டபடி அமைதியான முறையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க செயல் தலைவர் அ.ஜாஹிர் ஹுசைன் அறிக்கை வெளியிட்டுள்ளார் .